இந்தியா

இன்ஸ்டாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

7 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு

வேட்டையன்

புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இது தொடர்பாக 7 நாட்களில் விரிவான விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் இன்ஸ்டா தளத்தில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை பரப்புவதற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. மேலும், டிஜிட்டல் தளங்கள் அரசின் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி நிறுவனத்தின் விசாரணை மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் குறித்து விவரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை தீவிரமாக ஆராயும் வகையில் புதிதாக இன்ஸ்டா கணக்கை பிபிசி தொடங்கி உள்ளது. அதில் பாலியல் ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. அதை மேலும் ஆராயும் வகையில் பாலியல் ரீதியான பதிவுகளை பகிரும் 10 இன்ஸ்டா ஃப்ரொபைல்களை ஃபாலோ செய்துள்ளது. அதன் பின்னர் பாலியல் ரீதியான விளம்பரங்கள் அந்த கணக்கில் வந்துள்ளது. இதில்தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் இருந்துள்ளன.

அதில் இருந்த லிங்குகளில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் வீடியோ லிங்குகள் (டெலிகிராம்) கட்டண சந்தாவாக கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கவனித்த அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த புலனாய்வு விசாரணையில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் வீடியோ லிங்குகள் சுமார் 30 இருப்பது தெரிய வந்தது. இதோடு ஆபாசப் படங்களுக்கான லிங்குகளும் இருந்ததை பிபிசி கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாவில் ரிப்போர்ட் செய்த போது அதில் விதிமுறைகள் மீறப்படவில்லை என மெட்டா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்டாவை தொடர்பு கொண்டு பிபிசி தொடர்ந்து கேள்வி எழுப்பி உள்ளது. அதையடுத்து அந்த விளம்பரங்கள் மற்றும் அதோடு தொடர்புடைய கணக்குகளை சஸ்பெண்ட் செய்ததாக மெட்டா பதில் தந்துள்ளது. மேலும், விதிமுறை மீறல் தொடர்பான பதிலுக்கு தங்களது ரிவ்யூ அமைப்பில் தவறு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான் குழந்தைகளுக்கு எதிரான கட்டண விளம்பரங்களை நீக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக யூஸர்நேம் தொடர்பாக மெட்டா, டெலிகிராம், சிக்னல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், டெலிகிராம் தளத்தில் வெளியாகும் பைரசி திரைப்படங்கள் மற்றும் தொடர் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT