மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்காக எதுவுமே செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே நேற்று கூறியதாதவது:
பிரதமர் மோடி மத்திய அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. பட்ஜெட் 2026 இந்தியாவின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை. ஏழை மக்களுக்காக பட்ஜெட்டில் எதுவுமே செய்யப்படவில்லை.
“திட்டச் செயல்பாடு முறை” இப்போது “சவாலான பாதை” ஆகிவிட்டது. கொள்கையில் தொலைநோக்கு பார்வை இல்லை, அரசியல் உறுதிப்பாடு இல்லை. நமக்கு அன்னமிடும் விவசாயிகள் இன்னும் அர்த்தமுள்ள நலத்திட்ட ஆதரவு அல்லது வருமான பாதுகாப்பு திட்டத்துக்காகக் காத்திருக்கின்றனர். சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காணப்பட்ட நிலைகளை தாண்டிவிட்டது, ஆனால் பட்ஜெட் அதை பற்றி குறிப்பிடக்கூட இல்லை.
பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எந்த ஆதரவையும் இந்த பட்ஜெட் வழங்கவில்லை. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு அவை எந்த நிவாரணத்தையும் வழங்குவதாக தெரியவில்லை. கூட்டாட்சித் தத்துவம் பலியாகிவிட்டது.
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனுக்காகவோ அல்லது பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகவோ எந்த ஒரு தீவிர திட்டமும் இல்லை. ஏற்றுமதி சரிவு, கட்டண அபாயங்கள், வர்த்தக பற்றாக்குறை, சுருங்கி வரும் உலகளாவிய பங்கு ஆகியவற்றிற்கு எந்த பதிலும் இல்லை.
பணவீக்கத்திலிருந்து நிவாரணம் இல்லை. சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது, ஊதியம் தேக்கமடைந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஊதிய தேக்கம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. வாக்குறுதிகள் மீண்டும் மீண்டும் வழங்கப்படுகின்றன. ஆனால், செயல்பாடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.