பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்

 
இந்தியா

“யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” - பிரேமலதா தகவல்

செய்திப்பிரிவு

யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

          

மதுரையில் எல்ஐசி மேலாளராக இருந்த கல்யாணி என்பவரை கொலை செய்துள்ளார்கள். தீ விபத்து என கூறப்பட்ட நிலையில் இப்போது கொலை எனக் கண்டுபிடித்து காவல்துறை குற்றவாளியை கைது செய்து உள்ளனர். பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வரும் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. குற்ற வாளிக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு கொடுக்கும் தண்டனை, இது போல் எண்ணம் யாருக்கும் வராத வண்ணம் இருக்க வேண்டும்.

எல்ஐசி நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள், அந்த பெண்மணியின் குடும்பத்தினருக்கு உதவி செய்து குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். டெலிவரி செய்யும் நபர் மீது சாலையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. கஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டும், சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டும், மக்களின் பாதுகாப்பை இந்த அரசு நிச்சயம் உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக பியூஷ் கோயல் எங்களுடன் பேசி வருவதாக சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தன. ஆனால், அது தொடர்பாக எங்களுக்கே தகவல் வரவில்லை. அந்தச் செய்தியில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. பியூஷ் கோயல் ஏன் வந்திருக்கிறார், கட்சி தொடர்பான கூட்டமா கூட்டணி தொடர்பான கூட்டமா என்று கூட தெரியவில்லை.

நான் ஏற்கெனவே கூறியது போல எங்கள் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து கூட்டணி குறித்து அறிவிப்பேன். வரும் 24-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களைத் தேடித் தலைவர்’ சுற்றுப்பயணத்தை நான்காம் கட்டமாக நடத்த உள்ளோம். கூட்டணி என்பது சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் ஆலோசித்து, பின் இரு தரப்பிலும் அறிவிக்கும் போது தான் அது அதிகாரபூர்வமானது.

இன்னும் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை. எங்கள் மாவட்டச் செயலாளர்கள் உடனான கலந்தாலோசனை தான் முடிந்திருக்கிறது. ஒரு அண்ணியாக இல்லாமல் ஒரு அம்மாவாக மிக மிகப் பொறுப்புடன் நான் இருக்கிறேன். யாருடன் இறுதியாக கூட்டணி அமைக்க போகிறோம் என்பதை உரிய நேரத்தில் எங்கள் மாவட்டச் செயலாளர்களை மீண்டும் அழைத்துப் பேசி எங்கள் முடிவைச் சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT