புதுடெல்லி: தடை செய்யப்பட்ட என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு புத்தகத்தை தயாரித்த குழுவில் வழக்கறிஞர் இடம் பெற்றிருந்தார், அதை சட்டத்துறை உறுப்பினர்கள் சரிபார்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றிருந்தது. இதில் நீதித்துறை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தும் விவரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. நீதித்துறையை அவமதிக்கத் திட்டமிட்ட சதி செய்யப்பட்டது போல் தெரிகிறது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இந்த புத்தகத்துக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை செயலாளர், என்சிஇஆர்டி இயக்குநர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் 8-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற அத்தியாயம் புத்தகம் வெளியாவதற்கு முன்பாக சட்டத்துறை உறுப்பினர்களால் ஆய்வு செய்யப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த கல்வித்துறை அதிகாரிகள், ‘‘என்சிஇஆர்டி புத்தகம் தயாரித்த குழுவில் வழக்கறிஞரும் இடம் பெற்றிருந்தார். ஆனால் என்சிஇஆர்டி புத்தகத்தை சட்டத்துறை உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை எதுவும் இல்லை’’ என்றனர்.