புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் கூறிய கருத்து துல்லியமானது அல்ல என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையின் மாறி வரும் சூழல் மற்றும் 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு ஆதாரங்களில் இருந்து மலிவு விலையில் பெறுவதற்கான அவசியம் ஆகியவையே கச்சா எண்ணெய் இறக்குமதியை வழிநடத்துகின்றன.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை 500% ஆக உயர்த்துவதற்கான மசோதா குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசாததே ஒப்பந்தம் நிறைவேறாததற்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் தெரிவித்திருப்பதைப் பார்த்தோம். கடந்த ஆண்டு பிப்.13 முதலே அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக இருந்தன.
ஒரு சமநிலையான, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு தரப்பினரும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒரு ஒப்பந்தத்துக்கு மிக அருகில் இருந்தோம். அமெரிக்க வர்த்தக அமைச்சரின் விளக்கம் துல்லியமானது அல்ல. ஒன்றால் மற்றொன்று பயனடையும் சக்திகளாக உள்ள இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் நாங்கள் தொடர்ந்து ஆர்வமாக உள்ளோம். ஒப்பந்தம் கையெழுத்தாவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லூட்னிக், ‘‘இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அந்த நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க - இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நாங்கள் கருதினோம். அதற்காக நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இப்போது பிரச்சினை என்னவென்றால், அந்த ஒப்பந்தம் அதிக வரி விதிப்புகளைக் கொண்டதாக இருந்தது. அதனால், அதை ஒப்புக்கொள்ள இந்தியா தயங்கியது. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். ஒப்பந்தத்தை இறுதி செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேசுமாறு கோரினேன்.
அதற்கு அவர், ஒப்பந்தத்தை ஏற்பதை இந்தியாவுக்கு உகந்ததாக உணரவில்லை என கூறினார். இதனால், அவர் ட்ரம்ப்புடனான தொலைபேசி அழைப்பை தவிர்த்தார்.
ஆனால், நாங்கள் ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று இந்தியா பின்னர் கூறியது. எதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன்’’ என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.