புதுடெல்லி: நொய்டாவில் தொழிலாளர்களின் வன்முறை போராட்டத்தை தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியத்தில் 21% வரை இடைக்கால உயர்வை உ.பி. அரசு அறிவித்துள்ளது. உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் 35% உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதுபோன்று உ.பி.யிலும் உயர்த்தக் கோரி இவர் கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து உ.பி. அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தில் இடைக்கால உயர்வை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் அரசால் அமைக்கப்படும் ஊதிய வாரியத்தின் பரிந்துரைக்கு பிறகு, நிரந்தர குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் அன்-ஸ்கில்டு தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை 21% வரை அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு,
நொய்டா மற்றும் காசியாபாத்தில் 21% ஆகவும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் 15% ஆகவும் மற்ற இடங்களில் 9% ஆகவும் இருக்கும். உதாரணமாக, உ.பி.யில் அன்-ஸ்கில்டு தொழிலாளர்கள் தற்போது மாதத்திற்கு ரூ.11,313 பெறுகின்றனர். இது நொய்டா, காசியாபாத்தில் ரூ.13,690 ஆக உயரும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ரூ.13,006 ஆகவும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ரூ.12,356 ஆகவும் உயரும்.
இதுபோல் நொய்டா மற்றும் காசியாபாத்தில் செமி-ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,445-ல் இருந்து ரூ.15,059 ஆகவும் ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு ரூ.13,940-ல் இருந்து ரூ.16,669 ஆகவும் உயரும். தொழிலாளர்களுக்கு விதிகளின்படி மாதாந்திர ஊதியம், கூடுதல்நேரப் பணிக்கான ஊதியம், வாராந்திர விடுமுறை, போனஸ், சமூக பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பணியிடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேராசை அல்ல: ராகுல் காந்தி
தொழிலாளர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நொய்டாவில் ஒரு தொழிலாளி மாதம் ரூ.12,000 ஊதியம் பெறுகிறார்.
ஆனால் வீட்டு வாடகையாகவே ரூ.4,000 முதல் ரூ.7,000 வரை செலவிடுகிறார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.300 ஊதிய உயர்வு கிடைக்கும் போது வீட்டு வாடகையை அதன் உரிமையாளர் ரூ.500 உயர்த்தி விடுகிறார். ஊதியத்தில் எவ்வித உயர்வையும் வழங்காமலேயே, தொழிலாளர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக மோடி அரசு நீட்டித்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த அந்தத் தொழிலாளி ரூ.20,000 கோருகிறார். இது பேராசை அல்ல — இது அவரது உரிமை; அவரது வாழ்வின் ஒரே அடித்தளம். அரசால் ஒரு சுமையாக சுருக்கப்பட்டுவிட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் நான் துணையாக நிற்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.