இந்தியா

ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு - இந்தியா திட்டவட்ட மறுப்பு

பால. மோகன்தாஸ்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியா அந்த நாட்டுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியா கொடுத்த பதிலடியில் அந்த நாட்டின் விமானப் படைத் தளம் கடுமையாக சேதமடைந்தது. இந்தியாவின் பதிலடி தீவிரமாக இருந்ததை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ), இந்திய டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார். இதை இந்தியா ஏற்றது. இதையடுத்து, போர் முடிவுக்கு வந்தது. இதை இந்திய ராணுவம் அப்போதே செய்தியாளர்களிடம் விளக்கியது.

எனினும், இந்தியா - பாகிஸ்தான் போரை தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறினார். எனினும், இந்திய வெளியுறவுத் துறை அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், போரின்போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவிய சீனா, இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாக கூறி உள்ளது.

நேற்று (டிச. 30) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ‘‘இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத அளவாக இந்த ஆண்டு உள்ளூர் போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அடிக்கடி வெடித்தன. நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டது. வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினை, கம்போடியா-தாய்லாந்து பிரச்சினை ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்’’ என்று கூறி இருந்தார்.

வாங் யி-யின் கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘‘இதுபோன்ற கூற்றுக்களை நாங்கள் ஏற்கனவே மறுத்துள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பிரச்சினைகளில் மூன்றாம் தரப்புக்கு எந்த பங்கும் இல்லை. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்பது இரு நாடுகளின் டிஜிஎம்ஓ-க்களுக்கு இடையே நேரடியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்திவிட்டோம்’’ என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT