புதுடெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் மோதல் காரணமாகவும், ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் அந்த வழியாக நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, ஹர்தீப் சிங் புரி இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறியது: “மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட பெரிய இடையூறுகளை இந்தியா வெற்றிகரமாக கடந்து வருகிறது. போர் நீண்ட காலம் நீடித்தாலும், இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் விநியோக ஏற்பாடுகளும் போதுமான அளவு உள்ளன. ஒவ்வொரு வீடு மற்றும் தொழில் துறைக்கும் மின்சாரம் உற்பத்தி முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தக கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக உலகின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்.பி.ஜி. ஆகியவை சுமார் 20% இந்த பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
முன்பு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 45% இந்த பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த பாதையில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால், இந்த பாதையைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து சுமார் 70% அளவுக்கு இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. மோதல் தொடங்குவதற்கு முன்பு இது 55% ஆக மட்டுமே இருந்தது.
2006-07 காலத்தில் 27 நாடுகளிடம் இருந்து மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா, தற்போது 40 நாடுகளிலிருந்து வாங்குகிறது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் (ATF) ஆகியவற்றில் எந்த பற்றாக்குறையும் இல்லை. இவை அனைத்தும் போதுமான அளவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனில் செயல்படுகின்றன. சில நேரங்களில் 100% ஐ விட அதிக திறனிலும் செயல்படுகின்றன.
இயற்கை எரிவாயு விநியோகத்தைப் பொறுத்தவரை, மார்ச் 9 அன்று வெளியிடப்பட்ட Natural Gas Control Order அடிப்படையில் முன்னுரிமை ஒதுக்கீட்டு முறை அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் எரிவாயு, வாகனங்களுக்கு வழங்கப்படும் CNG ஆகியவற்றுக்கு எவ்வித குறைப்பும் இல்லாமல் 100% விநியோகம் வழங்கப்படுகிறது. தொழிற்துறை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடந்த ஆறு மாத சராசரியில் 80% வரை எரிவாயு வழங்கப்படும். உர ஆலைகளுக்கு 70% வரை வழங்கப்படும்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
நாட்டில் உள்ள 33 கோடி குடும்பங்களுக்கு எல்.பி.ஜி. கிடைப்பதை உறுதி செய்ய கடந்த ஐந்து நாட்களில் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு உற்பத்தி 28% அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும், சேமித்து வைப்பதை தடுக்கவும் நகர்ப்புறங்களில் எல்.பி.ஜி. சிலிண்டர் மீண்டும் பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Delivery Authentication Code முறை 90% பயனர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. சிலிண்டர் பதிவு செய்த பின் விநியோகத்திற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்தவரை, எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பதிவு செய்தது முதல் விநியோகம் வரை வழக்கமாக இரண்டரை நாட்கள் ஆகும். இப்போதும் அது தொடர்கிறது. எரிவாயு பயன்பாட்டை குறைக்க அரசு மாற்று எரிபொருள் வாய்ப்புகளையும் செயல்படுத்தியுள்ளது. பொது விநியோக அமைப்பு மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஒரு மாதத்துக்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் biomass, RDF pellets, மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆகியவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் எல்.பி.ஜி. முக்கிய தேவைகளுக்காக சேமிக்கப்படும்” என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.