மேகேதாட்டு
புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ல் அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடகா கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என கூறியுள்ளது மத்திய அரசுக்கு தெரியுமா? இதற்கு கர்நாடகா ஒப்புதல் பெற்றுள்ளதா? ஆகிய விவரங்களை ஜல்சக்தி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்’ என்று மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி நேற்று கூறியிருப்பதாவது: காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பில்,காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெறவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நடுவர் மன்றதீர்ப்பின் ஒரு பகுதியாக, காவிரிநீரை அந்தந்த மாநிலத்தில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், பலனை அனுபவிக்கவும், திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேகேதாட்டு அணையைப் பொருத்தவரை, திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது. அதுகுறித்த விரிவான அறிக்கையை தீர்ப்பாய ஒப்புதலோடு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் கர்நாடகா உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்து 9.19 டிஎம்சி. ஆனால் வந்தது 2.195 டிஎம்சி. ஜூலை மாதம் வர வேண்டியது 31.24 டிஎம்சி. ஆனால் வந்தது 0.459 டிஎம்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.