புதுடெல்லி: ஓஎஸ்எம் என்ற ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் சிபிஎஸ்இ தேர்வுகளை மதிப்பீடு செய்ததில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘இந்த நடைமுறையால் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘மறுமதிப்பீட்டிற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டு, 1.68 லட்சம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை மறுஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தற்போது கருணை மதிப்பெண்கள் கேட்கிறார்கள். அதற்கு எந்த சாத்தியமும் இல்லை’ என தெரிவித்தார்.
இதையடுத்து மதிப்பீடு செய்யப்பட்ட விடைத் தாள்களில் குளறுபடிகள் கண்டறியப்பட்ட தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.