பாகிஸ்தான் அமைச்சர் மாலிக்
கோப்புப் படம்
புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிக உரையாடல் மன்ற கலந்துரையாடலில் பங்கேற்ற பாகிஸ்தான் அமைச்சர் மாலிக், இந்தியா அழைத்தால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றி பேச பாகிஸ்தான் தயார் என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், பாகிஸ்தான் உடன் முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என மத்திய கலாச்சார செயலாளர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘புராணா கிலா’ (Purana Quila) வளாகத்தில் நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் எஸ்சிஓ நாகரிக உரையாடல் மன்றம் (Civilisational Dialogue Forum) நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மத்திய அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் கலந்து கொண்டார்.
மாநாட்டின் நிறைவில் மத்திய கலாச்சார செயலாளர் விவேக் அகர்வால், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த விவேக் அகர்வால், “இரு தரப்பினருக்கும் இடையே எந்தவிதமான முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர், “கலாச்சாரப் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் ஈரான் இடையே இருதரப்பு ஆலோசனைகள் நடைபெற்றன. பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும், எந்தவொரு குறிப்பிட்ட திட்டமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்
அதோடு, விருந்து நிகழ்ச்சிகளின் போதும் மாநாட்டின் இடையிலும், மற்ற நாட்டு அமைச்சர்களுடன் நடந்தது போலவே பாகிஸ்தான் தரப்பினருடனும் சில முறைசாரா கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்துப் பேச இந்தியா அழைப்பு விடுத்தால், பாகிஸ்தான் நிச்சயம் பேசத் தயாராக உள்ளது. ஆனால், இந்த முறை பிராந்திய விவகாரங்கள் மற்றும் கலாச்சாரம் தொடர்பான எஸ்சிஓ மன்றத்தில் பங்கேற்க மட்டுமே தாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்றார்.