இந்தியா

“பிரதமர் மோடியை விட பெரிய பெண்ணியவாதி இருக்க முடியாது” - கங்கனா புகழாரம்

டெக்ஸ்டர்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், பிரதமர் நரேந்திர மோடியை விட் பெரிய பெண்ணியவாதி வேறொருவர் இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய அவர், “இன்று, பாரதத்தின் மகள்கள் பிரதமர் மோடியை விடப் பெரிய பெண்ணியவாதி யாரும் இல்லை என்று நம்புகிறார்கள். பெண்ணியத்தின் ஒரே அடையாளமாக அவரே திகழ்கிறார். இந்த நாட்டின் மகள்கள் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்கள். இந்தியப் பெண்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

தனது உரையின் போது, இந்த மசோதாவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்த கங்கனா, இது ஒரு "அரசியலமைப்பு ரீதியான அவசியம்" என்று குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை செயல்முறை மிகவும் முக்கியமானது மற்றும் தேவையானது என்றும் அவர் கூறினார்.

அரசியல் என்பது சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கங்கனா, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே பெண் சிசுக்கொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த மசோதா அவசரகதியில் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த கங்கனா, "இந்தியப் பெண்களுக்கு நீதி வழங்குவதற்காகவே பிரதமர் மோடி அவசரம் காட்டுகிறார். பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT