பாட்னா: பிஹார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் 20 ஆண்டுகளாக தான் வசித்து வந்த முதல்வரின் அதிகாரப்பூர்வ வீட்டை நேற்று நிதிஷ் குமார் காலி செய்தார்.
அவரது வீட்டில் இருந்த கட்டில், மேஜை, நாற்காலிகள், ஏர் கூலர்கள் போன்ற பொருட்களை அவரது வேலையாட்கள் டிராக்டர் மூலம் அனுப்பி வைத்தனர். பல ஆண்டுகள் முதல்வராக இருந்த போதும் தனது வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் எதையும் நிதிஷ்குமார் பயன்படுத்தவில்லை. அவர் தினமும் பயன் படுத்தும் பொருட்களை 3 சக்கர தள்ளுவண்டியில் அவரது உதவியாளர்கள் எடுத்துச் சென்றனர்.
பாட்னாவிலுள்ள அன்னே மார்க் பகுதியில் வசித்து வந்த நிதிஷ்குமார், தற்போது சர்க்குலர் சாலையில் 7-ம் எண்ணுள்ள வீட்டுக்கு மாறியுள்ளார். சுமார் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த போதும்அவர் ஏசி போன்ற பொருட்களைப் பயன்படுத்தவில்லை. கடந்த 2014-ல் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.
அப்போது சில காலம் சர்க்குலர் சாலை பங்களாவில் நிதிஷ்குமார் வசித்து வந்தார். தற்போது அதே பங்களாவுக்குச் செல்கிறார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாரின் இந்த எளிமையான வாழ்க்கையைப் பாராட்டி சமூக வலை தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.