நிதிஷ்குமார்

 
இந்தியா

பிஹார் முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்: பிரதமர் மோடி உட்பட பிரமுகர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ்குமார், இன்று முதல்வராகப் பதவியேற்கிறார். பிஹார் மாநிலத்தில் 10-வது முறையாக அவர் முதல்வர் பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

பிஹார் மாநிலத்தில் கடந்த 6, 11-ம் தேதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐஜத 85 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில் ஐஜத எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐஜத சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து என்டிஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த புதிய எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணித் தலைவராக ஒருமனதாக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு நிதிஷ்குமார் சென்றார். பின்னர், பிஹாரில் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் கடிதத்தை ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிதிஷ்குமார் வழங்கினார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு நிதிஷ்குமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

காலை பதவியேற்பு: பிஹாரில் இன்று காலை 11.30 மணிக்கு 10வது முறையாக முதல்வர் பதவியேற்கிறார் நிதிஷ்குமார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். பதவியேற்பு விழா நடைபெறும் காந்தி அரங்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT