பிரதமர் மோடியுடன் முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்

 
இந்தியா

10வது முறையாக பிஹார் முதல்வரானார் நிதிஷ் குமார்: 26 அமைச்சர்கள் பதவியேற்பு

வெற்றி மயிலோன்

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் என்டிஏ கூட்டணி தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று (நவம்பர் 20) பிஹார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ் குமார் பதவியேற்ற உடனேயே, பாஜக தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஜேடியு தலைவர்கள் விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், பாஜக தலைவர்கள் மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால் மற்றும் நிதின் நபின் உள்ளிட்ட பலரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

முன்னதாக, நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவை குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, பாட்னாவில் உள்ள நிதிஷ்குமாரின் இல்லத்தில் நடைபெற்ற ஜேடியு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் ​​அவர் ஜேடியு சட்டப்பேரவை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

26 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு:

பீகாரில் மொத்தம் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பாஜகவிலிருந்து 14 பேர், ஜே.டி.யுவிலிருந்து 8 பேர், எல்.ஜே.பியிலிருந்து 2 பேர், எச்.ஏ.எம் மற்றும் ஆர்.எல்.எம்லிருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 26 பேரில் ஒரே ஒரு முஸ்லிம் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

மஹுவா சட்டமன்றத் தொகுதியில் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவை தோற்கடித்த எல்.ஜே.பி யின் சஞ்சய் குமார் சிங் உட்பட 9 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பீகார் அமைச்சரவையில் மூன்று பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கயா டவுனில் இருந்து 9 முறை பாஜக எம்.எல்.ஏ.வான பிரேம் குமார் சபாநாயகராக பொறுப்பேற்கிறார்.

SCROLL FOR NEXT