நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார்
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் விரைவில் அரசியலில் நுழையலாம் என ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்த கருத்து அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நிஷாந்த் குமார் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற குரல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அவர் நாளந்தாவில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று பேச்சு எழுந்தது. இருப்பினும், நிஷாந்தை களமிறக்காமல் ஜேடியு வலுவான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தது.
இருந்தபோதிலும், நிஷாந்தின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் கட்சி வட்டாரங்களுக்குள் தொடர்கின்றன. நிஷாந்த் அரசியலில் நுழைவதும், கட்சிக்குள் முக்கிய பொறுப்புகளை ஏற்பதும் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கூறியிருந்தனர். ஆனால் இறுதி முடிவு நிஷாந்தின் தந்தை முதல்வர் நிதிஷ் குமாரிடம் உள்ளது.
இந்தச் சூழலில், நேற்று பாட்னா விமான நிலையத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. நிஷாந்த் குமார் ஊடகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் நின்ற சஞ்சய் குமார் ஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில், நிஷாந்தின் அரசியல் வருகையை வெளிப்படையாக ஆதரித்தார்.
சஞ்சய் குமார் ஜா பேசுகையில், “கட்சி உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் நிஷாந்த் குமார் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் அனைவரும் அதையே விரும்புகிறோம், ஆனால் அவர் எப்போது சேருவார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
முன்னதாக, நிஷாந்த் குமார் பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் இது பிஹார் மக்களின் ஆசீர்வாதம் என்று கூறினார். பொதுமக்கள் மீண்டும் ஒருமுறை தனது தந்தை நிதிஷ் குமார் மற்றும் தேஜகூட்டணி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.
தனது தந்தையின் தலைமையின் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்திய நிஷாந்த், “எனது தந்தை தனது முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றினார், இந்த முறையும் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவார்.” என்றார்.