பாட்னா: பிஹார் முதல்வராக 10வது முறையாக பொறுப்பேற்று 4 மாதங்களே ஆன நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ்குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிஹார் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. 10-வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். இந்நிலையில் பிஹாரில் விரைவில் காலியாகும் 5 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைய இருந்தது. இத்தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் நேற்று திடீரென வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் விடுத்துள்ள செய்தியில் "கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் பிஹார் மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம். உங்களுடனான இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும் வளர்ச்சியடைந்த பிஹாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவேன் எனவும் மனதார உறுதி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற 4 மாதங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். தேசிய அரசியலுக்கு செல்லும் அவருக்கு விரைவில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையில் பிஹாரில் பாஜக தரப்பில் ஒருவர் முதல்வராகலாம் என கூறப்படுகிறது. பிஹாரில் இதுவரை பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது இல்லை. பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்றால் பிஹாரில் பாஜக தலைமையிலான முதல் அரசாக அது இருக்கும்.
இந்நிலையில் பாஜக தரப்பில் முதல்வர் பதவிக்கான போட்டியில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக பதவியேற்கலாம் எனவும் கூறப்படுகிறது. பிஹாரில் 5 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பாஜக சார்பில் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சிவேஷ் குமார் போட்டியிடுகின்றனர். என்டிஏ கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரியலோக் மோர்ச்சாவின் தலைவர் உபேந்திர குஷ்வாகா மீண்டும் போட்டியிடுகிறார். ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் கட்சியின் 2-வது வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.