நிதிஷ் குமார்
பாட்னா: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தெரிவித்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு தனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த வலிமை மூலம்தான் நாங்கள் பிஹாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழுமையான விசுவாசத்துடன் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் காரணமாகவே பிஹார் இன்று வளர்ச்சியுடன் கூடிய மரியாதையின் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. இதற்காக நான் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து பிஹார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
பிஹார் மக்களுடனான எனது இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்கும் என்றும் நான் மனமார உறுதியளிக்கிறேன். பிஹாரில் அமைய உள்ள புதிய அரசாங்கத்துக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்‘‘ என்று தெரிவித்துள்ளார்.
வரும் மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் நிதிஷ்குமாரும் மற்றொன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூரும் போட்டியிட உள்ளனர். மாநிலங்களவைக்குப் போட்டியிட உள்ளதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளார். அடுத்த முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், நிதிஷ் குமார் விரைவில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.