சென்னை: ‘எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று, மாநிலங்களவையில் கமல்ஹாசன் எழுப்பிய முதல் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். இந்நிலையில், அவையில் தனது முதல் கேள்வியாக எத்தனால் எரிபொருள் பயன்பாடு குறித்து கேட்டார். அதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: ‘இ-20’ எனும் எத்தனால்-20 எரிபொருளைக் கொண்டு நடத்தப்பட்ட விரிவான கள சோதனைகள், வாகனங்களின் இணக்கத்தன்மையில் எந்த சிக்கலையோ, எதிர்மறை விளைவுகளையோ ஏற்படுத்தவில்லை
பழைய வாகன செயல்திறனில்கூட குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை காட்டவில்லை. அசாதாரண தேய்மானத்தையும் உருவாக்கவில்லை என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. வாகனத்தின் இயக்கம் தொடங்கும் திறன், ஓட்டும்திறன் போன்றவற்றிலும் பிரச்சினை வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி தொழில்நுட்பத்தில் தோரியம் பயன்பாடு குறித்து மற்றொரு கேள்விக்கு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்: இந்தியாவில் குறைவான யுரேனியமும், அதிக தோரியமும் உள்ளன. தோரியத்தை அணுஉலையில் யுரேனியம்-233 ஆக மாற்றிய பிறகே அணு ஆற்றல் உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். எனவே, அணு ஆற்றல் துறையால் வடிவமைக்கப்பட்ட 3 கட்ட அணு ஆற்றல் திட்டத்தை செயல்படுத்தவும் யுரேனியம் வளங்களை இயன்றவரை பயன்படுத்தவும், தோரிய வளங்களை நீண்டகால நிலைத்த ஆற்றல் பாதுகாப்புக்காக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.