பனாஜி: மும்பை–கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வருவதால் அதன் தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம், பனாஜி அருகே போர்வோரிமில் புதிதாக அமைக்கப்பட்ட ஆறு வழிச்சாலை உயர்மட்டப் பாதையை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
பின்னர் அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மும்பை–கோவா நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகள் 2011-ல் தொடங்கப்பட்டன. பழைய இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்று வதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 2016-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வப்
போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்காக சுமார் ரூ.16 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் மும்பையில் இருந்து கோவாவுக்கு சாலை வழியாகப் பயணம் செய்து, இச்சாலையை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.
பயணிகளுக்கு பயணம் செய்வதற்கு வசதியாக மாறியுள்ளதா என்பதையும் மதிப்பிடுவேன். மும்பை–கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இவ்வளவு காலம் தாமதமானது எனக்கு வெட்கமாக உள்ளது. எனவே, அதன் தொடக்க விழாவுக்கு நான் வரமாட்டேன். மேலும், உள்கட்டமைப்புத் திட்டங்களில் தாமதம் மற்றும் மோசமான பணிகளுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அத்துடன், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.