சுரேந்தர் கோலி
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாரி தொடர் கொலை வழக்கு நாட்டையே உலுக்கியது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி (53), உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தேநீர் கடையில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதாரி தொடர் கொலை வழக்கின் பின்னணி: கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் நொய்டா செக்டர் 31 குடிசைப்பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயின. போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் போன சூழலில், அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாயலின் கைபேசி ஒரு ரிக்ஷா ஓட்டுநரிடமிருந்து போலீஸாரிடம் சிக்கியது. செக்டர் 31-ல் உள்ள டி-5 சொகுசு பங்களா பணியாளர் தனக்கு அதைக் கொடுத்ததாக ரிக்ஷாக்காரர் கூறினார். இதன் அடிப்படையில் டி-5 பங்களாவில் மணீந்தர் சிங் பாந்தரின் பணியாளராக வேலை செய்து வந்த சுரேந்தர் கோலி போலிஸாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் நம்ப முடியாதவையாக இருந்தன. டிசம்பர் 2006-ல் டி-5 சொகுசு பங்களா வளாகத்திலும் அதன் முன் உள்ள கால்வாயிலும் தோண்டப்பட்ட போது, ஒன்றன்பின் ஒன்றாகச் சடலங்கள், எலும்புக்கூடுகள் மற்றும் 19 குழந்தைகள், ஒரு இளம்பெண்ணின் மண்டை ஓடுகள் வெளியாகி நாட்டையே உலுக்கின. உடல்களின் சில துண்டுகள் பங்களாவின் கழிவறையிலும் பிரிட்ஜிலும் வைக்கப்பட்டிருந்தன.
10 பெண்கள் உள்ளிட்ட 19 குழந்தைகள் கொலையானதாக வழக்குகள் பதிவாகின. சிபிஐ நடத்திய பிரைன் மேப்பிங், நார்கோட்டிக் விசாரணைகளின் முடிவில், சுரேந்தர் கோலி ஒரு மனநோயாளி எனவும், அவர் குழந்தைகளைக் கொன்று அந்த உடல்களுடன் தவறான முறையில் உறவு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பங்களா உரிமையாளர் மணீந்தர் சிங் பாந்தர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டு, பாந்தர் மீது 6 வழக்குகளும் கோலி மீது 13 வழக்குகளும் பதிவாகின.
காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் ஜூலை 2007-ல் அளித்த தீர்ப்பில், கோலிக்குத் தூக்கு தண்டனையும், பாந்தருக்குத் தூக்கு மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்தச் சம்பவத்தின் போது உபியில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசு மீது பொதுமக்கள் கடும்கோபம் அடைந்து கல்வீச்சில் ஈடுபட்டனர்.
நொய்டா உயர் அதிகாரிகள் உட்பட 30 போலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல்வாதிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். நீதிமன்ற வளாகத்திலேயே குற்றவாளிகள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. ரத்தவெள்ளத்தில் இருந்த மணீந்தர் மற்றும் கோலியை போலீஸார் காப்பாற்ற வேண்டியதாயிற்று
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேல்முறையீட்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அக்டோபர் 2023-ல் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மணீந்தர் சிங் பாந்தரை விடுதலை செய்தது. கோலிக்குத் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்கள் சட்டப்படியானவை அல்ல எனக் கூறி, முறையான சாட்சிகள் இல்லாததால் 2025-ல் உச்ச நீதிமன்றம் சுரேந்தர் கோலியையும் விடுவித்தது. சுமார் 19 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு கோலி விடுதலையானார்.
சுரேந்தர் கோலியின் மர்ம மரணம்: சிறையிலிருந்து விடுதலையான பிறகு கோலியுடன் அவரது குடும்பத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. இதனால் 53 வயதான சுரேந்தர் கோலி பிழைப்புக்காக அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. விடுதலையான பின் சில மாதங்கள் டெல்லியிலும், பின்னர் டேராடூனிலும் வாழ்ந்துள்ளார். அங்கு சிறிய சிற்றுண்டிக் கடை நடத்தியவருக்கு வியாபாரம் சரியாக இல்லாததால், ஹரித்துவாரில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 3 மாதங்களாகத் தான் கோலி என்பதை மறைத்து 'சதாராம்' என்ற போலி பெயரில் வாழ்ந்து வந்த அவர், 3 தினங்களுக்கு முன்பு ஹரித்துவார் பூபத்வாலா பகுதியில் லால் மாதா கோயிலுக்கு எதிரில் ஒரு தேநீர் கடையைத் திறந்துள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (செப்.18) காலை அவர் தன் கடையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.
தகவலறிந்த உத்தராகண்ட் காவல் துறை உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியது. கடையில் இருந்த அடையாளச் சான்றுகளைச் சோதனையிட்ட போது, அவர் உத்தராகண்ட் அல்மோரா மாவட்டம் பிகியாசென் பகுதியின் மங்க்ருக்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் கோலி என்பது தெரியவந்தது.
குடும்பப் பின்னணி: சுரேந்தர் கோலி அல்மோராவைச் சேர்ந்தவர். மூன்று சகோதரர்களில் இவர் இளையவர்; இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். 2006-ல் இவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது மனைவி சிறையில் ஒருமுறை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவருடனான உறவை முறித்துக்கொண்டார். பின்னர் அவர் ஹரியானாவில் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார். கோலியின் சகோதரர் ஒருவர் டெல்லியிலும், மற்றொரு சகோதரர் அல்மோராவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். அவரது தாயார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
தற்கொலையா? கொலையா? - கோலியின் இறப்புச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நிதாரி சம்பவத்தில் தனது 15 வயது மகள் ஜோதியை இழந்த ஜபு லால் மற்றும் சுனிதா ஆகியோர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். “கோலி தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் ஒரு சதியின் பகுதியாகக் கொல்லப்பட்டுள்ளார். தூக்கிலிட்டுக் கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால் சிறையிலேயே செய்திருப்பார். நிதாரி வழக்கு தொடர்பான பல ரகசியங்கள் அவருக்குத் தெரிந்திருக்கலாம்; அதை அவர் வெளிப்படுத்த இருந்ததால் கொல்லப்பட்டிருக்கலாம். பங்களா உரிமையாளர் மணீந்தர் சிங் பாந்தர் தண்டிக்கப்படும் வரை எங்களுக்கு நீதி கிடைக்காது. எங்கள் குழந்தையின் கொலைக்கு பாந்தர் தான் காரணம்” என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹரித்வார் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. குடும்பப் பிரச்சினையே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டாலும், இறப்புக்கான உண்மையான காரணம் குறித்து உத்தராகண்ட் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.