மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 
இந்தியா

தொடர்ச்சியாக 9-வது முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: தனிநபர் வருமான வரியில் மாற்றம் இல்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இது தொடர்ந்து 9-வது முறையாக அவர் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் ஆகும்.

அவரது 85 நிமிட பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

          

கடந்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலைக்கழிவும் ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. இந்த புதிய வருமான வரி விகிதம் (New Regime) அப்படியே தொடர்கிறது.

பழைய வருமான வரி விகிதத்தில் (Old Regime) ரூ.2.50 லட்சம் வரை வரி கிடையாது. சில வரிச் சலுகைகள் மூலம் பழைய வரி விகிதத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. அந்த பழைய வருமான வரி விகிதமும் அப்படியே தொடர்கிறது.

வருமான வரிச் சட்டம் 1961-க்கு பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்படும். இதற்கு சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். ஐடிஆர்-1, ஐடிஆர்-2 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி. அதில் மாற்றம் இல்லை. தணிக்கை செய்ய தேவையில்லாத வணிகம் மற்றும் அறக்கட்டளைகள் ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யலாம். புதிய சட்டத்தின்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல்

செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஆனால், வருமானம் தொடர்பாக தவறான தகவல் அளித்தால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

நாடு முழுவதும் 5 பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படும். தமிழகம், கேரளா (பொதிகை மலை), இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீரில் உலகத் தரத்தில் மலையேற்ற சாகசம் (டிரெக்கிங்) தொடங்கப்படும். நாட்டின் 2-வது மிகப்பெரிய உப்புநீர் ஏரியான பழவேற்காட்டில் (தமிழகம், ஆந்திரா) பறவைகள் கண்காணிப்பு மையம் தொடங்கப்படும்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மற்றும் லோத்தல், தோல்வாரா, ரத்னகிரி, சாரநாத், அஸ்தினாபுரம், லே உள்ளிட்ட 15 அகழ்வாராய்ச்சித் தலங்கள் மேம்படுத்தப்படும். தென்னை மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த சுயதொழில் முனைவோருக்காக சிறப்பு அங்காடிகள் உருவாக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் அனிமேஷன் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. கல்வி, மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு 2 சதவீத டிசிஎஸ் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், வெளிநாடுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பயனடைவார்கள்.

புற்றுநோய் மருந்துகள், அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 ஆயுர்வேத எய்ம்ஸ் மருத்துவமனைகள், 5 பிராந்திய மருத்துவ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.10,000 கோடி முதலீட்டிலான பயோஃபார்மா சக்தி திட்டத்தால் மருந்து உற்பத்தி அதிகரிக்கும்.

மாணவிகளின் நலனுக்காக நாடு முழுவதும் உள்ள 800 மாவட்டங்களிலும் தலா ஒரு மகளிர் விடுதி கட்டப்பட உள்ளது. நாடு முழுவதும் மிகப்பெரிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. ஐஎஸ்எம்-2.0 திட்டம் மூலம் செமி கண்டக்டர் சிப் உற்பத்தி அதிகரிக்கும். குறு, சிறு தொழில் துறையை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT