புதுடெல்லி: 2022 முதல் தலைமறைவாக இருந்த பிரபல கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவிலிருந்து இன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.
அன்மோல் பிஷ்னோய் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் மீது மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவுக்கு மாறி மாறி பயணம் செய்தது தெரியவருகிறது.
இவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர். அன்மோல் இன்று புதுடெல்லி கொண்டுவரப்பட்ட நிலையில், அவரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் கைது செய்யப்பட்ட 19வது நபர் அன்மோல் ஆவார்.
அன்மோல் 2022 முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் 2020 மற்றும் 2023 க்கு இடையில் தனது சகோதரர் லாரன்ஸுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், அன்மோல் அமெரிக்காவிலிருந்து பிஷ்னோய் வலையமைப்பைத் தொடர்ந்து இயக்கி வந்தார் என்றும், இந்தியாவில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை ஒருங்கிணைத்து செயல்பட்டார் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிடம் மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்தார் என்றும், வெளிநாட்டிலிருந்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை நடத்தினார் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
அன்மோலின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது அகமதாபாத் சபர்மதி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.