புதுடெல்லி: ‘ஜோ பச்சே ஹைன் சங் சமேட் லோ’ என்ற தொடர், பாகிஸ்தான் எழுத்தாளர் பர்ஹத் இஷ்தியாக் உருது நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய காதல் கதையாகும். இந்தத் தொடரில் பாகிஸ்தானின் பிரபல நடிகர்களான பவத் கான், மஹிரா கான், சனம் சயீத், அஹத் ராசா மிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் டிச.4-ம் தேதி உலகம் முழுவதும் இந்தத் தொடர் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரை நெட்ஃபிளிக்ஸில் வெளியிட எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘கடந்த 2025-ம் ஆண்டு மே 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவுறுத்தலை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த அறிவுறுத்தலில், இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்கள், ஊடக ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும்.
மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் உள்ள நெறிமுறைகளை ஓடிடி தளங்கள் பின்பற்ற வேண்டும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான உறவுகள் அல்லது பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கங்களை ஒளிபரப்பும்போது ஓடிடி தளங்கள் உரிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.