போராட்டத்தின்போது தடுப்புகள் மீது ஏற முயன்ற ராகுல் காந்தி

 
இந்தியா

‘நிலைகுலைந்த சதிகாரர்கள்’ - ராகுல் மீதான எப்ஐஆர் பதிவுக்கு காங்கிரஸ் கண்டனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் தற்போது நிலைகுலைந்து போயுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒருபுறம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மறுபுறம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோர் சேர்ந்து தீட்டிய வாக்குத் திருட்டு சதியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுதியான ஆதாரங்களுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

அதிகார மமதை கொண்ட ஆட்சியாளர்களின் தூண்டுதலால் வாக்காளர் பட்டியலில் இருந்து அநீதியான முறையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் அரசியலமைப்பு ரீதியிலான வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இந்த அநீதியை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சத்தியாகிரப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், டெல்லி காவல் துறை அவர் மீதும், பிற தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. சதியில் ஈடுபட்ட இந்த தரப்பினர் இப்போது நிலைகுலைந்து, செய்வதறியாது தவித்து வருகின்றனர். வர இருக்கும் காலம் எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்த தெளிவான அறிகுறி இப்போது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​க வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்ற பேரணி டெல்லியில் நேற்று நடைபெற்றது. மக்​களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்​தி, சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்​கட்சி எம்​பிக்கள் சுமார் 300 பேர் இதில் பங்கேற்றனர்.

நாடாளு​மன்ற வளாகத்​தில் இருந்து 3 கி.மீ. தொலை​வுக்கு அவர்கள் பேரணி​யாகச் சென்​றனர். அகில இந்​திய வானொலி நிலை​யம் (ஆகாஷ்வாணி) அரு​கில் போலீ​ஸார் தடுப்​பு​களை அமைத்து எதிர்க்​கட்சி எம்​பிக்​கள், தலை​வர்​கள், தொண்​டர்​களை தடுத்து நிறுத்​தினர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி உள்​ளிட்​டோர் தடுப்​பு​களின் மீது ஏறி கோஷமிட்​டனர். பின்​னர் அகில இந்​திய வானொலி நிலைய வளாகத்​துக்குள் சென்று ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். அவர்களை டெல்லி போலீ​ஸார் வேனில் ஏற்​றினர். எனினும், ராகுலும் பிரி​யங்கா​வும் வேனில் இருந்து இறங்கி மீண்​டும் வானொலி நிலைய வளாகத்​தில் நுழைந்​தனர்.

ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்​தி, 50 எம்​பிக்​கள் உட்பட 250 பேர் வானொலி நிலைய வளாகத்​தில் தொடர் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். சுமார் 9 மணி நேரத்​துக்​கும் மேலாக அவர்​களின் தர்ணா நீடித்​தது. இரவு 8 மணி அளவில் டெல்லி போலீ​ஸார் அவர்களை கைது செய்து அங்​கிருந்து வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்​றினர்.

இந்நிலையில், அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஆகாஷ்வாணி ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 10 எம்பிக்கள் மற்றும் பலர் மீது டெல்லி போலீஸார் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து டெல்லி காவல் துறை அதிகாரி ஒருவர், “குறைந்தது 10 எம்பிக்கள் மற்றும் அடையாளம் காணக்கூடிய பிற நபர்களின் பெயர்கள் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றவியல் அத்துமீறல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT