இந்தியா

37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் நேபாளம் சென்றது இந்தியாவின் 2வது விமானம்

பால. மோகன்தாஸ்

புதுடெல்லி: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று 10 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்துக்காக 37.5 டன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவுப் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது. இந்தியா, நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம். உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.

நேற்று அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கடக் ராஜ் பவுடலிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) குழுக்கள் ஏற்கனவே நேபாளத்தை அடைந்துவிட்டன. உயிர் பிழைத்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வரவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும் சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எங்கள் என்டிஆர்எப் குழுக்கள் தேவையான அனைத்து கருவிகளுடன் அங்கு சென்றுள்ளன. நமது நட்பு மற்றும் அண்டை நாடுகள் இபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், உயிர்களைக் காப்பாற்றுவது, உணவுப் பொருட்களை வழங்குவது, மருத்துவப் பொருட்கள் மற்றும் சிகிச்சையை உறுதி செய்வது என முழுமையான உதவியை அளிப்பதில் இந்தியா ஒருபோதும் சளைத்ததில்லை. அங்குள்ள மக்களுக்கு உதவ இந்திய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

சில இந்தியர்களும் காணாமல் போயுள்ளனர். இது வருத்தம் அளிக்கிறது. நெருக்கடியை எதிர்கொள்ளும் நேபாளத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகள் குறித்து நாங்கள் சமமான அக்கறை கொண்டுள்ளோம். நேபாளத்துடன் இந்தியாவுக்கு நீண்டகால உறவு உள்ளது.” என தெரிவித்தார்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 175 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT