பி.வி. குல்கர்னி

 
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளியான பேராசிரியர் கைது

டெக்ஸ்டர்

புனே: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2026-ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், புனேவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள குல்கர்னி, தேசியத் தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாள்களை அணுகும் அதிகாரம் அவருக்கு இருந்துள்ளது.

தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஏப்ரல் கடைசி வாரத்தில் புனேவில் உள்ள தனது இல்லத்தில் ரகசிய பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். அங்கு மாணவர்களுக்கு வினாக்களையும், அவற்றுக்கான விடைகளையும் அவர் முன்கூட்டியே வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள், பேராசிரியர் சொல்லச் சொல்ல வினாத்தாள்களைத் தங்கள் குறிப்பேடுகளில் எழுதி வைத்துள்ளனர். தேர்வுக்குப் பிறகு ஆய்வு செய்ததில், அந்த ரகசிய வகுப்பில் கொடுக்கப்பட்ட வினாக்களும், மே 3 அன்று கேட்கப்பட்ட அசல் வினாக்களும் துல்லியமாகப் பொருந்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குல்கர்னிக்கு உதவியாகச் செயல்பட்ட மனிஷா வாக்மரே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ஏழு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மங்கி லால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர் ராஜஸ்தானின் சீகர் வழியாக இந்த வினாத்தாள் கசிவு வலைப்பின்னலை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளனர். இவர்களது குடும்பத்தினர் கடந்த காலங்களிலும் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்டு விற்பனை செய்ததாகப் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள் எழுந்ததையடுத்து கடந்த மே 12-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரியலில் 90 வினாக்களும், வேதியியலில் 45 வினாக்களும் அவர்கள் தயாரித்த மாதிரி வினாத்தாள் உடன் அப்படியே ஒத்துப்போனது ஊர்ஜிதமானது. தற்போது இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வரும் சிபிஐ, இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் தேடி வருகிறது.

SCROLL FOR NEXT