புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் (என்டிஏ) தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நான் நீண்ட காலம் பதவி வகித்துள்ளதை தனிப்பட்ட சாதனையாகப் பார்க்கவில்லை. என்டிஏவில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் கூட்டு சாதனையாகத் தான் இதை நான் காண்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 12 ஆண்டுகால ஆட்சியின் ஒரு முக்கிய வெற்றி என்னவென்றால், நாடு காங்கிரஸின் தீய சுழற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வளர்ச்சி மெதுவாகத்தான் நிகழும் என்றும், விரைவான வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டு இருந்தனர். மிகத் தந்திரமாக, அந்த மெதுவான வளர்ச்சிக்கு ‘இந்து வளர்ச்சி விகிதம்' என்று பெயரிடப்பட்டது.
நாட்டில் விரைவான வளர்ச்சி சாத்தியமில்லை என்றும், பொருளாதார முன்னேற்றம் மெதுவான வேகத்தில் மட்டுமே நிகழ முடியும் என்றும் நம்பும் வகையில் காங்கிரஸ் அரசுகள் நாட்டு மக்களை பழக்கப்படுத்தி இருந்தன. கொள்கையில் தோல்வி ஏற்பட்டால், காங்கிரஸ் அரசுகள் அதை நாட்டின் பெரும்பான்மையான இந்து மக்கள் மீது சுமத்தி வந்தனர். உண்மையில், இந்த மோசமான கலாச்சாரத்துக்கு ‘காங்கிரஸ் வளர்ச்சி விகிதம்' என்று பெயரிட்டிருக்க வேண்டும்.
ஆட்சி நிர்வாகம், கொள்கை வழிகாட்டுதல், தெளிவான நோக்கம் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் ஆகிய எதுவும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இல்லை. அதன் விளைவாகவே நாட்டின் வளர்ச்சி மந்தமாக இருந்தது. மக்கள் மத்தியில் ஏமாற்றமும் ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரை, மக்களே இறைவனின் வடிவம். அதனால்தான் இந்தச் சேவையை நான் எப்போதும் ஒரு ஆன்மிகப் பணியாகவே கருதி வருகிறேன். இது ஒருபோதும் தனிப்பட்ட முயற்சியாக இருந்ததில்லை. இது ஒரு கூட்டு யாகமாக இருக்கிறது. இதில் நீங்களும் (கூட்டணிக் கட்சிகள்) மற்ற பல சகாக்களும் கடமை உணர்வுடன் சேவையை வழங்கியுள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.