புதுடெல்லி: “கடந்த 12 ஆண்டுகளில், பெண்கள் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தீவிரமாக பணியாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பவியேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையையும் மோடி சமீபத்தில் பெற்றார். இந்நிலையில், இந்த 12 ஆண்டுகளில் பெண்கள் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் தனது தலைமையிலான அருசு தீவிரமாக பணியாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “கடந்த 12 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுப்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அருசு தீவிரமாகப் பணியாற்றியுள்ளது. இது பல்வேறு துறைகளிலும் தெளிவாகத் தெரிகிறது.
பொருளாதார உள்ளடக்கல், தொழில்முனைவு முதல் கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
கண்ணியம், வாய்ப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முயற்சிகள் அமைந்துள்ளன. பெண்கள் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்தவும், தேசத்தைக் கட்டமைப்பதில் இன்னும் வலுவான பங்களிப்பை வழங்கவும் ஏற்ற சூழலை உருவாக்க இம்முயற்சிகள் உதவியுள்ளன.
அறிவியல், விண்வெளி, புத்தாக்கம் போன்ற துறைகளில் இந்தியாவின் பெண்கள் சக்தி முத்திரை பதிப்பதைக் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு நாடு முழுவதும் வளர்ச்சிப் பாதையையும் மாற்றி அமைத்து வருகிறது.
பெண்களை நிதி ரீதியாகச் சுதந்திரமானவர்களாக மாற்றுவதில் பெரும் பங்காற்றி வரும் சுய உதவிக் குழுக்களுக்கு எங்கள் அரசு தீவிர ஆதரவை அளித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.