அல் பலா பல்கலை
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டி, சிறுபான்மை அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது எனக் கேட்டு அல் பலா பல்கலைக்கழகத்துக்கு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அல் பலா பல்கலைக்கழகத்தில் உதவி மருத்துவப் பேராசிரியராக பணியாற்றி வந்த உமர் நபி என்பவர் வெடி குண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த முஜாம்மில் ஷகீல் கனாய் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை கருத்தில் கொண்டு அல் பலா பல்கலைக்கழகத்துக்கு தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையம் நேற்று (வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பியது. அதில், சிறுபான்மை அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என்பதற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிசம்பர் 4-ம் தேதி தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையம் விசாரணை நடத்தும்.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 30(1), மொழி மற்றும் மத சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்க அடிப்படை உரிமையை வழங்குகிறது. தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன ஆணையம், ஒரு நீதித்துறை சார்ந்த அமைப்பாகும். இந்த ஆணையம், பரிந்துரை, ஆலோசனை, தீர்ப்பு ஆகியவற்றை வழங்க முடியும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், ஜெயின் ஆகிய ஆறு பிரிவினரை மத்திய அரசு சிறுபான்மையினராக வகைப்படுத்தியுள்ளது.
இதனிடையே, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் கண்டொன்மென்ட் வாரியம், அல் பலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அகமது சித்திக்கின் மூதாதையர் சொத்தை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த கட்டிடம் பாதுகாப்பு அமைச்சக நிலத்தில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களுக்குள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கண்டோன்மென்ட் வாரியம் கட்டிடத்தை இடிக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் பலா பல்கலைக்கழகத்துக்கும் தீவிரவாத செயல்களுக்குமான தொடர்பு புதிதல்ல என்றும், கடந்த 2007ம் ஆண்டு இந்த கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையில் பி.டெக் முடித்த மிர்சா ஷதாப் பேக் என்பவர், 2008ல் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 2008ம் ஆணடு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளில் இவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.