இந்தியா

தமிழகத்தின் மனப்போக்கு மாற வேண்டும்: நவோதயா பள்ளி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

வேட்டையன்

புதுடெல்லி: நவோதயா வித்​யால​யா பள்ளி தொடர்பான வழக்கில் தமிழகத்தின் மனப்போக்கு மாற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தமிழகத்தில் நவோதயா வித்​யால​யா பள்ளி நிறுவுவது தொடர்பான வழக்கில் சுமார் ஒரு மணி நேர விவாதத்துக்கு பின்னர் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு இந்த கருத்தை தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த டிச.15-ல் மாவட்டம்தோறும் நவோதயா வித்​யால​யா பள்ளிகள் அமைப்பதற்கான தகுதியான இடங்களை அடையாளம் காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு இணங்க தற்போது நீதிமன்றம் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளதாக தகவல்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், நவோதயா வித்​யால​யா பள்ளி அமைப்பது கொள்கை அளவிலான முடிவு. அதை ஒரு மாநிலத்தின் மீது செயல்படுத்துமாறு அழுத்தம் தரக்கூடாது. அது மாநிலத்துக்கு எதிரான கொள்கை மற்றும் சட்ட விதிகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்றும் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் அப்போதைய தமிழக அரசு (திமுக ஆட்சி) சார்பில் தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நவோதயா பள்ளி மும்மொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளது. இதன் மூலம் புறவாசல் வழியாக இந்தி மொழியை திணிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதன் பின்னர் நீதிபதி நாகரத்னா தனது கருத்தை தெரிவித்தார். “ஆட்சி மாற்றம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கல்வி நிலையானது. அது எந்தவொரு அரசின் விருப்பத்தையும் சார்ந்தது அல்ல. இன்று இந்த நிலை நவோதயா வித்​யால​யா பள்ளிக்கு வந்துள்ளது. இதை உதாரணமாக ஆட்சி முறையின் மற்ற கொள்கைகளுக்கும் எடுத்துக்காட்டாக சொன்னால், நாடு என்ன ஆகும்? ‘தேசிய தொழில் கொள்கை’, ‘தேசிய நிதி கொள்கை’ உள்ளிட்டவற்றை ஏற்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா?” என்று அவர் தெரிவித்தார்.

‘இந்தி’ மொழி கற்பிக்கப்படாது என்ற மனப்போக்கை தமிழகம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், தனியொரு மாநிலம், தனியொரு நாடு போல செயல்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தது.

கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதாகவும். மேற்கூறிய தொழில் மற்றும் நிதி கொள்கைகள் மத்திய பட்டியலில் இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா அதற்கு பதில் தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிச.14-ல் நடைபெற உள்ளது.

வழக்கின் பின்னணி:

முன்னதாக, தமிழகத்​தில் மாவட்​டம்​தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்​யால​யா’ பள்​ளியை நிறுவ அனு​ம​திப்​பது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் சமீபத்​தில் விசா​ரணைக்கு வந்​த​போது, மாவட்​டம்​தோறும் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவது குறித்த தமிழக அரசின் நிலைப்​பாடு மற்​றும் பள்​ளிக்​கான நிலங்​களை அடை​யாளம் காண்​பது குறித்து 3 வாரத்​துக்​குள் தெரிவிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்​து, இந்த வழக்​கில் தமிழக அரசு பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​தது. அதன் விவரம்: நவோதயா பள்​ளி​கள் விஷ​யத்​தில் தமிழக அரசு தனது நிலைப்​பாட்டை கடந்த ஜன.5-ம் தேதி​யிட்ட கடிதம் மூலம் ஏற்​கெனவே மத்​திய அரசுக்​குத் தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் கல்விக் கட்​டமைப்பு மிகச் சிறப்​பாக உள்​ளது. தவிர, தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவதற்​கான முன்​மொழிவை வெறும் நிர்​வாக முன்​மொழி​வாக மட்​டுமே கருத முடி​யாது.

மத்​திய அரசின் நிர்​வாகக் கட்​டமைப்​புக்​குள் கல்விக் கொள்​கையை செயல்​படுத்​து​வது, மாநில அரசால் நிர்​வாக அதி​காரத்​தைப் பயன்​படுத்​து​வது தொடர்​பான சட்ட கேள்வி​களை​யும் இந்த வழக்கு எழுப்​பு​கிறது. மத்​திய அரசின் நிர்​வாகக் கொள்கை மூல​மாகவோ, நீதி​மன்ற உத்​தரவு மூல​மாகவோ, மாநிலச் சட்​டத்​துக்கு முரணான வகை​யில் செயல்​படு​மாறு கட்​டாயப்​படுத்த முடி​யுமா என்ற கேள்​வியை​யும் இந்த வழக்கு எழுப்​பி​யுள்​ளது.

கல்வி என்​பது பொதுப் பட்​டியலில் வரு​வ​தால், இதில் சட்​டம் இயற்​ற​வும், கொள்கை வகுக்​க​வும் மாநில சட்​டப்​பேர​வைக்​கும் முழு அதி​காரம் உள்​ளது. அதன்​படி, தமிழகத்​தில் 2006-ம் ஆண்டு தமிழ் கற்​றல் சட்​டத்​தின்​ கீழ், தமிழகத்​தில் அனைத்​துப் பள்​ளி​களி​லும் தமிழ் மொழி கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, ஒரு மாநில அரசின் சொந்​தச் சட்​டங்​களுக்கு முரணான மத்​திய அரசின் நிர்​வாகக் கொள்​கைகளை செயல்​படுத்த முடி​யாது. எனவே, நவோதயா பள்​ளி​கள் நிறு​வுவதை கட்​டாய​மாக்​கவோ, தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த மாநில அரசைக் கட்​டாயப்​படுத்​தவோ மத்​திய அரசுக்கு அதி​காரம் இல்​லை.

மேலும், நிலம் தொடர்​பான விஷ​யங்​கள் மாநில விருப்​புரிமைக்கு உட்​பட்​டவை என்​ப​தால், ஒரு மாநிலத்​திடம் அதன் நிலத்தை ஒப்​படைக்​கவோ, ஒதுக்​கீடு செய்​யவோ நீதி​மன்​றம் கட்​டாயப்​படுத்தி உத்​தரவு பிறப்​பிக்க முடி​யாது. எனவே, நவோதயா பள்​ளி​களுக்கு நிலத்தை அடை​யாளம் காணு​மாறு கடந்த 2025 டிசம்​பர் மாதம் பிறப்​பித்த உத்​தரவை உச்ச நீதி​மன்​றம் திரும்பப் பெற வேண்​டும்​ என்று அதில்​ கூறப்​பட்​டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT