புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார். சனிக்கிழமைக்குள் (நாளை) ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், சிஜேபி சார்பில் அக்டோபர் 2 அன்று தேசிய அளவிலான போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: “நமது நாட்டில் தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றன. ஆனால், முறைகேடுகள் நிறைந்த இந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அந்த தேர்தல்களுக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்.
மேலும், அவை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவது போன்ற ஒரு மாயையைத் தக்கவைக்கவும் உதவுகிறீர்கள். ஒருவேளை, தேர்தலில் போட்டியிடாவிட்டால் தங்களது கட்சி அரசியலில் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) தொடர்ந்து போட்டியிடலாம். ஆனால், வாக்குகள் திருடப்படும்போது, உங்களுடைய சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் பக்கம் இழுக்கப்படும்போது, உங்கள் கட்சிகள் பிளவுபடுத்தப்படும்போது, நீங்கள் எதைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்?
இது அரசியல் பிழைப்புக்கான முயற்சி அல்ல. உங்களை பலவீனப்படுத்தவோ, உங்கள் கட்சியைப் பிளவுபடுத்த, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பில், நீங்கள் உயிர்வாழ மட்டுமே முயற்சிக்கிறீர்கள். இப்படி எவ்வளவு காலத்துக்கு உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்?
உங்களுக்குத் தேவையான மாநிலங்களில் தேர்தல் முறைகேடு நடக்கும்போது மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, மற்ற இடங்களில் நடக்கும்போது மவுனமாக இருக்கிறீர்கள். தேர்தல் முறைகேடு என்பது எந்த மாநிலத்தில் அல்லது எந்தக் கட்சி பாதிக்கப்படுகிறது என்றில்லாமல் ஒரு முக்கியப் பிரச்சினையாக அனைத்துக் கட்சியினரும் நினைக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 2-ல் மும்பையில் தொடங்கும் போராட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும். காந்தி ஜெயந்தி தினத்தில், ஜனநாயகத்தைக் காக்க நாம் உறுதியேற்போம்” என்று அவர் தெரிவித்தார்.