கரோனா தடுப்பூசி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச அரங்கில் அங்கீகரிக் கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு தயாரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும் கரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தகுதியுடையவர்கள். அவர்கள் தடுப்பூசி சான்றிதழை ஒருவகை பாஸ்போர்ட்டாக பயன்படுத்தலாம் என்று சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
உலக சுகாதார அமைப்பு தயாரித்துள்ள பட்டியலில் இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி சேர்க்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வாலிடம் நிருபர்கள் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி கரோனா தொற்று இல்லை என்ற சான்றி தழ் வைத்திருப்பவர்கள் மட்டுமேவெளிநாடு செல்ல அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
தடுப்பூசி பாஸ்போர்ட் விவ காரத்தில் சர்வதேச அளவிலும் உலக சுகாதார அமைப்புடனும் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி வீணாவது மார்ச் மாதம் 8 சதவீதமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல கோவேக்சின் தடுப்பூசி வீணாவது 17 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியதாவது:
பாலூட்டும் தாய்மார்கள் பெண்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பிறகு சில நாட்களுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று வெளியான தகவல்கள் தவறானவை. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம்.
கரோனா 2-வது அலையில் சிறாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனினும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை. கரோனாவினால் சிறார் உயிரிழப்பது மிகவும் குறைவு. சிறாருக்கு கரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான மருந்து கையிருப்பு அதிகரிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ