ஹரித்துவார்: ரூர்க்கி ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி தலைமுறை என்று குறிப்பிட்டார்.
ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அஜித் தோவல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். விழாவில், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியம் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். 2,701 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் உரையாற்றிய அஜித் தோவல், “கடந்த 1,000 ஆண்டுகளில் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற இருக்கும் அதிர்ஷ்டசாலி தலைமுறை நீங்கள்தான். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களுக்கு முந்தைய தலைமுறைகள் அடிமைத்தனத்தின் பிடியில் அல்லலுற்றன. உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்ல, இங்கும் சரி, உலக அளவிலும் சரி சூழல் உங்களுக்குச் சாதமாக மாறியுள்ளது. எந்தவொரு நாட்டின் அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்பமே மிக முக்கியமான உந்து சக்தியாக இருக்கப்போகும் ஒரு காலகட்டத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள்” என தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “தன்னைத் தானே புதிதாக வடிவமைத்துக் கொள்ளத் தீவிரமாக முயன்று கொண்டிருக்கும் ஒரு உலகிற்குள் நுழையும் முதல் தலைமுறை நீங்கள். எனது தலைமறை அறிந்திருந்த உலக ஒழுங்குமுறை, இன்று அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியுள்ளது.
ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம், நாம் அனைவரும் இயல்பானதாகக் கருதி வளர்ந்த விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை இனி புனிதமானதாகவோ மாற்ற முடியாததாகவோ கருதப்படப் போவதில்லை.
மாறி வரும் உலக யதார்த்தங்களையும் நவீன ஜனநாயக அமைப்புகளின் நிலையற்ற தன்மையையும் நீங்கள் (மாணவர்கள்) உணர்ந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் எனும் வரப்பிரசாதங்களை ஒருபோதும் சாதாரணமாகவோ அற்பமானதாகவோ எண்ணிவிடாதீர்கள்.
நான் சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்தவன். நாங்கள் நல விஷயங்களை இயல்பானவையாகவும் நிலையானவையாகவும் கருதினோம். உலகம் சட்டங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது என்று எங்கள் தலைமுறை நம்பியது.
புதிய உலக ஒழுங்கை மீண்டும் கட்டமைப்பதற்கான பெரும் பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்படவுள்ள ஒரு சூழலுக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு பெரிய சாதகம் உள்ளது. ஏனெனில், இன்றைய உலக ஒழுங்கின் மையமாக தொழில்நுட்பம் திகழப்போகிறது” என தெரிவித்தார்.