இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நிராகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான குற்றப்பத்தி ரிகையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) என்ற நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா என்ற நிறுவனம் வாங்கியது. யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் இயக்குநர்களாக உள்ளனர்.

ரூ.2,000 கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தை வெறும் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியதாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடுத்தார். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி டெல்லி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர். அந்த எப்ஐஆர் நகல்களை சோனியா, ராகுல் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி விஷால் கோக்னே நேற்று விசாரித்து அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அமலாக்கத் துறையின் இந்த வழக்கு, எந்த எப்ஐஆர்-ம் இல்லாமல் தனிநபர் (சுப்பிரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது. மேலும், வழக்கில் தற்போதைய நிலையில், சோனியா, ராகுல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், டெல்லி போலீஸார் பதிவு செய்துள்ள எப்ஐஆர் நகல் பெறுவதற்கு தகுதியவற்றவர்கள். அதே நேரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை சம்பந்தப்பட்டவர்களுக்கு டெல்லி போலீஸார் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்தலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

டெல்லி போலீஸாரின் எப்ஐஆர் அடிப்படையில், சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT