அமைச்சர் கீர்த்தனா, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்
அமராவதி: ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ முயற்சியை ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாரா லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: “முதலீட்டாளர்களை அணுக அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட முன்முயற்சியை பாராட்டுகிறேன். தொழில்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தை சந்தைப்படுத்த வேண்டும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும், வேலைவாய்ப்பை அளிப்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றுக் கூச்சலை புறக்கணியுங்கள். ட்ரோல்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. முதலீடுகள்தான் உருவாக்குகின்றன.
மாநிலங்கள் முன்முயற்சியுடன் செயல்பட்டு தேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில் துறையில் ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு வலுவான போட்டியாளராக திகழும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட ரீல்ஸ் பதிவில், “தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம். கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. அதனை சரிசெய்யவே முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார்.
நமது அரசு 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுக்கு உறுதியளிக்கிறது. பிரச்சினைகளை என்னிடமும், முதல்வரிடமும் நேரடியாக கொண்டு செல்லலாம் என்று உறுதியளிக்கிறோம்.
ஏஐ நகரங்கள் முதல் பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தி மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் என பல புதுமைகளை செயல்படுத்தும் ஒரு சூழலை எங்கள் அரசு உருவாக்குகிறது.
முதல்வர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம். எதிர்காலம் இங்கே உள்ளது. எனவே தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களில் ரீல்ஸ் மூலமாக கவனம் ஈர்த்த விருதை மகள் கீர்த்தனா, இப்போது தொழில் துறை அமைச்சரான பின்னரும் முதலீடுகளை ஈர்க்க அதே ரீல்ஸ் வழிமுறைகளை பயன்படுத்துவது சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அனைத்து தரப்பையும் சென்று சேரும் வகையில், அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்களை வெளியிட்டுள்ளார் என ஒரு தரப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ரீல்ஸில் அழைப்பு விடுப்பது பொருத்தமானதாக இருக்குமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் முயற்சிக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.