புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேருக்கு இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை, டெல்லி நீதிமன்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
மியான்மரில் இன அடிப்படையிலான ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேரை மார்ச் மாதம் கைது செய்தது. கடுமையான பிரிவுகளைக் கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் மீதான அந்தப் பிரிவுகளை, செப்டம்பரில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு முகமை நீக்கிவிட்டது.
தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஏழு பேர் மீதும் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டப் பிரிவுகள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளன. இவை சமரசத்தின் மூலம் முடித்துக்கொள்ளக்கூடிய குற்றங்கள். அச்சட்டத்தின் கீழ் கூறப்பட்ட மீறல்களுக்கான சமரசக் கட்டணத்தை வான்டைக் செலுத்தியதையடுத்து, கடந்த மாதம் அவருக்கு நீதிமன்றம் சட்டப்படி உரிமையான ஜாமீன் வழங்கியது.
மேத்யூ ஆரோன் வான்டைக் ஒரு மாத காலத்திற்குத் தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தார். விசாரணையில் மீண்டும் இணைய வேண்டும் என்ற நிபந்தனையுடன், வான்டைக் மற்றும் ஆறு உக்ரைன் நாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப டெல்லி நீதிமன்றம் அனுமதித்தது. நேற்று நடந்த நீதிமன்ற விசாரணைக்காக மேத்யூ ஆரோன் வான்டைக் இந்தியா திரும்பினார். ஆனால், ஆறு உக்ரைன் நாட்டவர்கள் இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை.
விசாரணையின்போது வழக்கின் பல அம்சங்களில் விசாரணை நடத்தக் கூடுதல் நேரம் தேவை என்று தேசிய புலனாய்வு முகமை கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், வான்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேரும் இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை, டெல்லி நீதிமன்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 வரை நீட்டித்து உத்தரவிட்டது.