புதுடெல்லி: தாங்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை முஸ்லிம்கள் வெளிப்படையாக எழுப்ப வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மைத் தலைவர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், “கூட்டத்தில் பேசிய தலைவர் ராகுல், எந்தவொரு முஸ்லிமும் அநீதிக்கு ஆளானால், அதை எதிர்த்து குரல் கொடுப்பது அவசியம் என தெரிவித்தார். ஒரு சிறுபான்மைக் குழுவின் உறுப்பினராக மட்டுமல்லாமல், தான் ஒரு 'முஸ்லிம்' என்ற வகையிலும் ஒருவர் தனது குரலை எழுப்ப வேண்டும் என ராகுல் வலியுறுத்தினார்.
இதேபோல், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப் பிரிவினர் பற்றியும் ராகுல் கூட்டத்தில் பேசினார். தங்கள் மீது தாக்குதல்கள் நடந்தால், அந்தக் குறிப்பிட்ட சமூகத்தைத் தெளிவாக அடையாளம் காட்டி அந்தப் பிரச்சினை எழுப்பப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமீப காலங்களாக பொதுமக்கள் இடையே, ’முஸ்லிம்’ என்று வெளிப்படையாகக் கூறுவதற்குப் பதிலாக ’சிறுபான்மையினர்’ என்ற சொல் பயன்படுத்துகிறது என்றும், சிறுபான்மையினரை ’முஸ்லிம்’ எனக் குறிப்பிட்டு அழைக்க கட்சியினர் தயங்கக்கூடாது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்” என தெரிவித்தன.
கடந்த 2014-ல் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு பிரதமராக நரேந்திரமோடி வந்திலிருந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதை அரசியலாக்கும் பொருட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இக்கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.