போபால்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தனது இளைய மகன் டாக்டர் அபிமன்யு யாதவுக்கு, உஜ்ஜைன் நகரில் நடத்தப்பட்ட கூட்டு திருமணத்தில் மிக எளிமையாக மணம் முடித்து வைத்தார்.
உஜ்ஜைன் நகரில் சன்வாரா கேதி என்ற இடத்தில் கிஷிப்ரா ஆற்றங்கரையில் 21 ஏழை ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. அவர்களோடு இணைந்து ம.பி. முதல்வரின் மகன் டாக்டர் அபிமன்யு யாதவ், டாக்டர் இஷிதா படேலை மணந்தார்.
ம.பி முதல்வர் மோகன் யாதவ் தனது மகன் அபிமன்யு யாதவுக்கு எளிமையான முறையில் திருமணம் நடத்தியது பலரை கவர்ந்துள்ளது.
முதல்வர் வீட்டு திருமண அழைப்பிதழும் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. 21 ஜோடிகளுடன் நடைபெறும் கூட்டு திருமணத்தில், தனது மகன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இதில் பங்கேற்போர் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்களை வழங்க வேண்டாம் எனவும், ஆசிகளை மட்டும் வழங்கும்படியும் முதல்வர் மோகன் யாதவ் வேண்டுகோள் விடுத்திருந்தார். கூட்டு திருமணத்தில் மணம் முடித்த ஜோடிகள் அனைவரது பெயரும் முதல்வர் வீட்டு திருமண பத்திரிகையில் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து அபிமன்யு யாதவ் கூறுகையில், ‘‘கூட்டு திருமணத்தில் பங்கேற்று மணம் முடித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. எனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.