இந்தியா

மும்பையில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - நிலவரம் என்ன?

13 நாட்கள் தாமதமாக தொடங்கியது பருவமழை

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​வ​தால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்​ளது.

மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் வழக்​க​மாக ஜூன் 10-ம் தேதி வாக்​கில் பரு​வ​மழை தொடங்​கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமத​மாக செவ்​வாய்க்​கிழமை பரு​வ​மழை தொடங்கியது. அன்று இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. நேற்று காலை​யிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்​தது. மும்பை மற்​றும் தானே, ராய்​கட், பால்​கர் மற்​றும் சிந்​துதுர்க் மற்றும் அதைச் சுற்​றி​யுள்ள மாவட்​டங்​களி​லும் கனமழை பெய்து வரு​கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்​நிலை​யில், மும்பை மற்​றும் புறநகர் பகு​தி​களுக்கு இந்​திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்​டி) நேற்று ஆரஞ்சு எச்​சரிக்கை விடுத்​தது. மும்பை முழு​வதும் தொடர்ந்து கனமழை பெய்​த​தால், தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளநீர் சூழ்ந்து சாலைப் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

வாக​னங்​கள் தண்​ணீரில் நீந்தி​யபடியே சென்​றன. இதனால் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. அந்​தேரி சுரங்​கப்​பாதை, தாதர், குர்லா ஆகிய இடங்களில் இடுப்​பளவு தண்​ணீர் தேங்​கி​யுள்​ள​தால் வாக​னங்​கள் ஆங்​காங்கே ஸ்தம்​பித்து நிற்​கின்​றன.

இது​போல தண்​ட​வாளங்​களில் நீர் தேங்​கிய​தால் மத்​திய மற்​றும் மேற்கு வழித்தட புறநகர் ரயில்​கள் 20 நிமிடங்​களுக்​கும் மேலாகத் தாமத​மாக இயக்​கப்​படு​கின்​றன. இதனால் அலு​வல​கம் செல்​லும் லட்​சக் கணக்​கான பணி​யாளர்​கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று முன்​தினம் இரவு மும்​பை​யின் விக்​ரோலி மேற்​குப் பகுதியில் உள்ள குடி​யிருப்பு ஒன்​றின் அருகே இருந்த தடுப்​புச் சுவர் இடிந்து விழுந்​தது. நேற்று காலை​யில் மத்​திய மற்​றும் மேற்கு புறநகர் ரயில் பாதைகள் சந்​திக்​கும் முக்​கிய சந்​திப்​பான தாதர் ரயில் நிலை​யம் நீரில் மூழ்​கியது. கனமழை​யின்​போது பலத்த காற்று வீசி​ய​தால் தாதர் பகு​தி​யில் கார் ஒன்​றின் மீது மரம் விழுந்த​தில் அது சேதமடைந்​தது.

அருணாச்​சலில் மேகவெடிப்பு

அருணாச்சல பிரதேசத்தின் லோயர் சுபன்​சிரி மற்​றும் கீயி பன்யோர் ஆகிய மாவட்​டங்​களில் மேகவெடிப்பு ஏற்​பட்டு அதி தீவிர கனமழை பெய்​தது. இதனால், வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்டு அப்​பகுதி கிராமங்​களை தண்​ணீர் முழு​வது​மாக சூழ்ந்துகொண்டது.

இந்த திடீர் வெள்​ளத்​தில் ஏராள​மான வீடு​களும், விவ​சாய நிலங்களும் சேதமடைந்​ததுடன், முக்​கிய நெடுஞ்​சாலைப் பாலங்களும் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. வரும் நாட்களி​லும் சில பகு​தி​களில் நிலச்​சரிவு மற்​றும் வெள்ள அபா​யம் நீடிக்​கும் என ஐஎம்டி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

SCROLL FOR NEXT