இந்தியா

‘டெல்லி போராட்டத்தில் போலீஸ் வன்முறைக்கு கண்டனம்’ - நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. முதலில் பகல் 12 மணி வரைக்கும், பின்னர் பகல் 2 மணி வரைக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. எனினும், டெல்லி போராட்ட வன்முறைக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவையை 12 மணிக்கு ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

பகல் 12 மணிக்கு சந்தியா ராய் தலைமையில் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவர், அவையை பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவை அதன் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் காலை 11 மணிக்குக் கூடியது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி. ராதாகிருஷ்ணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது வாழ்த்துரையில், நமது நாட்டின் அரசியல் சாசனம், ஜனநாயகம், ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது நமது இளம் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்க, உங்கள் தலைமை மிகச்சிறந்த முன்னாதரணமாக இருந்து வழிகாட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்று குறிப்பிட்டார்.

அப்போது அவையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேசையை தட்டி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போது, மல்லிகார்ஜுன கார்கே எழுந்து நின்று சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், அவையில் இருந்த உறுப்பினர்களுக்கும் கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து, கார்கே பேசுவதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்தார். டெல்லியில் நேற்று நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தொடர்பாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “வினாத்தாள் கசிவு, நீட் தேர்வை எதிர்த்து நமது மாணவர்கள் குரல் கொடுத்ததற்காக அவர்கள் தாக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. பலர் மருத்துவமனைகளில் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேசப்பட வேண்டும்” என்றார்.

தொடர் அமளி காரணமாக அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அவை மீண்டும் 12 மணிக்கு கூடியபோது மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT