ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப் படம்

 
இந்தியா

“லிவ்-இன் உறவு முறை ஒரு சீரழிவு” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

மோகன் கணபதி

புதுடெல்லி: “திருமணம் என்பது தர்மத்தை வளர்க்கும் ஓர் ஒழுக்கம்” என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘லிவ்-இன்’ உறவு முறை ஒரு சீரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வ மாங்கல்ய சபா ஏற்பாடு செய்திருந்த நவீன கால தாய்மை குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பாகவத், “ஜென்ஸீ தலைமைமுறையினர மற்றவர்களைப் பின்பற்றும் இயல்புடையவர்கள், உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். அவர்கள் அமைதியான மனதுடன் சிந்திப்பதில்லை. எது அவர்களுக்கு உண்மையாகனதாகத் தோன்றுகிறதோ அதையே அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

திருமணம் என்பது தர்மத்தை வளர்க்கும் ஓர் ஒழுக்கம். அதற்கு மாற்றாக ‘லிவ்-இன்’ உறவு முறை உள்ளது. இது நவீனத்துவம். இதன் விளைவுகள் என்ன? நமக்குத் தேவை மகிழ்ச்சிதான், பொறுப்புகள் அல்ல. தேவைப்படும்போது ஒன்றாக இருப்பது, தேவைப்படாதபோது பிரிந்து செல்வது. இதில், பொறுப்புகள் ஏதுமில்லை. இதனால் என்ன வளரும்? என்ன வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உலகெங்கம் பாருங்கள்.

நவீனத்துவம் தேவை. காலத்துக்கு ஏற்ப மாறுவது நமது நாட்டின் பாரம்பரியத்தின் விதி. ‘லிவ் இன்’ உறவு முறை ஒரு சீரழிவு. மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு. திருநங்கைகள் நமது சமூகத்தின் ஒரு பகுதி. அவர்களை கீழ்த்தரமாகப் பார்க்கக்கூடாது.

குழந்தைகளின் அலைபேசி பயன்பாட்டு ஒழுக்கத்தைப் பற்றி நாம் போதிக்கிறோம். ஆனால், நாமே அலைபேசிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். குழந்தை அழுதால்கூட தாய் அலைபேசியை அதனிடம் கொடுத்து விடுகிறார். அந்த அளவுக்கு நிலைமை உள்ளது. அலைபேசி பயன்பாட்டில் பெற்றோர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புதிய தலைமுறையினரிடம் அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை அவர்கள் தங்கள் நடத்தையில் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்தில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள். சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். புதிய தலைமுறை குழந்தைகளின் கேள்விகளுக்கு பெற்றோர் பதில் அளிக்க வேண்டும். குடும்பம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க குடும்ப உறுப்பினர்களிடையே உரையாடல் அவசியம்.

நாம் அரசாங்கத்தையே எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது பாரம்பரியத்தில் அரசாங்கம் இரண்டாம்பட்சம்தான். சமூகம்தான் முதன்மையானது. அரசாங்கம் இந்த சட்டத்தையோ அந்த சட்டத்தையோ இயற்ற வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதை நாம் நம் வீட்டிலேயே செய்ய முடியும்.

பழமையானவை அனைத்தும் பயனற்றவை என்று நம்பும் நிலையை ஆங்கிலேயர் ஆட்சி உருவாக்கியது. பல்வேறு விவகாரங்களில் முழுமையற்ற பார்வையால் மேற்கத்திய நாடுகள் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. நாமும் அவர்களையே பின்பற்றுகிறோம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT