முர்ஷிதாபாத்: பொதுக்கூட்டத்தில் ஓவியம் வழங்கிய சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிப்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம், மோடியின் உருவ படத்தை வரைந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காட்டுகின்றனர். அந்த படங்களை பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரைபடத்தை அன்பளிப்பாக வழங்கிய சிறுமி பிரிஸ்தி மொந்தலக்கு பிரதமர் மோடி கடந்த 24-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், உன்னிடம் பெறப்பட்ட அழகான வரைபடம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
உனது முயற்ச்சி, அர்ப்பணிப்பு ஆகியவை உனது வரைபடத்தில் பிரதிபலிக்கிறது. உன்னைப் போன்ற மக்களிடம் இருந்து பெறப்படும் அன்பு என்னுள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டை முன்னேற்றி, இளைஞர்களின் எதிர்காலத்துக்காக புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எனது உறுதியை வலுப்படுத்துகிறது.
மேற்கு வங்கத்தின் கலாச்சாரம், அறிவும் படைப்பாற்றலும் கலந்த கலவை. இங்கு இலக்கியம், இசை, நாடகம், காட்சி கலை ஆகியவை நவீன இந்தியாவின் சிந்தனையை உருவாக்கியுள்ளன. நமது இளைஞர்கள் இடையே காணப்படும் இதுபோன்ற படைப்பாற்றல் என்னிடம் பெருமிதத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. உனது சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.