கிரேட் நிகோபார் திட்டத்தால் மோடி அங்குள்ள 1.5 கோடி மரங்களை வெட்டி வீழ்த்த வழிவகை செய்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் மத்திய அரசு கிரேட் நிகோபார் திட்டத்தை ஏன் அனுமதிக்கக் கூட என்பதை விளக்கியுள்ளார். இதற்காக அவர் அந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு நேரில் சென்றுள்ளார்.
கிரேட் நிகோபார் திட்டம் என்றால் என்ன?
ராகுல் காந்தியின் கண்டனத்தை அறியும் முன்னர், கிரேட் நிகோபார் திட்டம் என்றால் என்னவென்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்தியாவின் தென்கடைக் கோடியில் இருக்கிறது கிரேட் நிகோபார் தீவுகள். இந்தத் தீவுகள் இந்திய நிலப்பரப்பைவிட தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கிறது.
1984-ல் இந்திரா காந்திக்குப் பின்னர் இந்த தீவுகளுக்கு எந்தவொரு இந்தியப் பிரதமரும் சென்றதில்லை. இந்த தீவுக்கூட்டத்தில் 10 ஆயிரம் பழங்குடியின மக்கள் தான் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இன்று முறையான முழுமையான சென்சஸ் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தீவுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மிகப் பெரிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதால் அரசியல் கவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள கிரேட் நிகோபர் திட்டத்தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பயணிக்கும் சரக்கு கப்பல்களை சிங்கப்பூர், கொழும்பு துறைமுகங்கள் கையாள்கின்றன. இதற்கு மாற்றாக இந்தியாவின் நிகோபார் தீவின் கலாத்தியா வளைகுடாவில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சர்வதேச கடல் வணிக போக்குவரத்தில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
மேலும், ராணுவத்துக்குப் பயன்படும் வகையிலும் இந்தத் துறைமுகம் இருக்கும். நிகோபார் தீவில் பிரம்மாண்ட கிரீன்பீல்ட் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இதுவும் ராணுவ பயன்பாட்டுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்படும்.
இதன்மூலம் சுற்றுலா, சரக்கு போக்குவரத்து மேம்படும். விமானப் படையின் வலுவான தளமாகவும் செயல்படும்.நிகோபர் தீவில் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், சுற்றுலா வசதிகள், பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரம்மாண்ட ஒருங்கிணைந்த நகரம் உருவாக்கப்பட உள்ளது. இந்த நகரத்தில் 5 லட்சம் பேர் வரை வசிக்க முடியும்.
துறைமுகம், விமான நிலையம், ஒருங்கிணைந்த நகரம் ஆகியவற்றுக்கு மின்சாரம் விநியோகம் செய்ய எரிவாயு மற்றும் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
கிரேட் நிகோபார் துறைமுக திட்டத்தால் இந்தியாவின் கடல் வழி வர்த்தகம் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா துறை மேம்படும். கணிசமான முதலீடுகள் குவியும்.
இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா வலுவடைய கிரேட் நிகோபார் உள்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் அவசியம். இந்த திட்டத்தால் அந்தமான்- நிகோபார் தீவுகளில் 1.82 சதவீத காடுகள் மட்டுமே அழிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று மத்திய அரசு கூறுகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி இது குறித்து இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “கிரேட் நிகோபார் திட்டத்தால் 161 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மழைக்காடுகளுக்கு ஆபத்து இருக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 1.5 கோடி மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும், பாதுகாக்கப்பட்ட பவளப் பாறைகள் அழியக்கூடும், மேலும் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் டெல்லியை போல் 4 மடங்கு பெரியதான இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்களை அழிக்கப் போகிறார்கள். இங்கே துறைமுகத்தை உண்டாக்கி பில்லியன் டாலர் கணக்கில் சம்பாதித்து, அதை இங்கே சொகுசு விடுதிகளும், காசினோக்களும் கட்டி ரியல் எஸ்டேட் விளையாட்டை அரங்கேற்றப் போகிறார்கள்.
அவர்களின் இலக்கு அதானிக்கு உதவ வேண்டும் என்பதே. அதற்காகவே அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு என்று கூறி கடற்படையின் பின்னால் ஒழிந்து கொள்கின்றனர்.
ஏற்கெனவே கேரளாவில் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் இருக்கிறது. அப்படியானால் கிரேட் நிகோபாரிலும் ஒரு துறைமுகத்தைக் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி கட்ந்த மே மாதம் அர்ப்பணித்து வைத்தார்.
உங்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் ஐஎன் எஸ் பாஸ்-ஐ விரிவாக்கம் செய்யுங்கள். கடந்த 5 ஆண்டுகளாகவே அதற்கான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அதுமட்டுமில்லாது, கிரேட் நிகோபார் பகுதியில் உள்ள மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த கட்டாயமாக தடையில்லா சான்றிதழ்கள் பெறப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.