மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.
புதுடெல்லி: அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.
கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.