ஹுமாயூன் கபீர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்ட அழைப்பு விடுத்த எம்எல்ஏ ஹுமாயூன் கபீரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரத்பூரைச் சேர்ந்த எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியின் ஒழுங்குமுறைக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹக்கீம், “அவர் இப்போது ரெஜிநகரில் வசிக்கிறார், பரத்பூரின் எம்எல்ஏவாக உள்ளார். அப்படியானால் அவர் ஏன் பெல்தங்காவில் ஒரு மசூதி கட்ட விரும்புகிறார்? ஏனென்றால் பெல்தங்கா வகுப்புவாத ரீதியாக உணர்திறன் மிக்க பகுதி. அங்கே கலவரங்கள் ஏற்பட்டால், அது பாஜகவுக்கு உதவும்.
திரிணமூல் காங்கிரஸ் வகுப்புவாத அரசியலில் ஈடுபடும் எவருடனும் தொடர்பில் இருக்காது. கட்சி ஏற்கெனவே கபீரை மூன்று முறை எச்சரித்திருந்தது. ஆனால் அவர் அந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாததால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று ஹக்கீம் கூறினார்.
முதல்வர் மம்தா பானர்ஜி முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் நிலையில், கபீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தனது சஸ்பெண்ட் குறித்து பதிலளித்த கபீர், “டிசம்பர் 22 அன்று முர்ஷிதாபாத்தில் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனிக் கட்சியை தொடங்குவேன். நான் பாஜக மற்றும் திரிணமூல் இரண்டிற்கும் எதிராக போட்டியிடுவேன். எனது பாபர் மசூதி கட்டும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று அவர் கூறினார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கபீர் 2015-ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இருந்து ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2018-இல் பாஜகவில் சேர்ந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில் முர்ஷிதாபாத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட்டார். பின்னர் 2021-இல் மீண்டும் திரிணமூல் கட்சியில் இணைந்தார்.