இந்தியா

ரிசர்வ் வங்கி அதிகாரிகளை போல நடித்து பெங்களூருவில் ஏடிஎம் வேனில் ரூ.7.11 கோடி கொள்ளை

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை போல‌ நடித்து ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேனில் இருந்த ரூ.7.11 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் எச்டிஎஃப்சி வங்கிக் கிளையில் இருந்து பணம் ஏற்றிக்கொண்டு சிஎம்எஸ் நிறுவனத்தின் வேன் ஜெயநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மாலை 4.30 மணியளவில் அசோகா தூண் அருகே அந்த வேன் சென்று கொண்டிருந்த போது, இன்னோவா வாகனத்தில் வந்த 8 பேர் அதை வழிமறித்தனர்.

தங்களை ரிசர்வ் வங்கி மற்றும் வருவாய் வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வேனில் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து "இவ்வளவு பெரிய தொகையை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? இதன் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்.

பணத்தை ஆய்வு செய்ய வேண்டும். சித்தாபுரா காவல் நிலையத்துக்கு எங்களோடு வாருங்கள்" எனக் கூறி, ஏடிஎம் பணம் நிரப்பும் வேனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். சிஎம்எஸ் ஊழியர்களையும், பண பெட்டிகளையும் தங்களது வாகனத்தில் ஏற்றினர்.

அங்கிருந்து டைரி சர்க்கிள் அருகே சென்ற போது சிஎம்எஸ் ஊழியர்களை மேம்பாலத்தில் இறக்கிவிட்டுவிட்டு, பணத்துடன் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிஎம்எஸ். ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய சாம்பல் நிற இன்னோவா, மாருதி ஜென் ஆகிய வாகனங்களின் பதிவெண்க‌ளைக் கொண்டு தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆணையர் விளக்கம்: இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் கூறுகையில், "முதல்கட்டமாக சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தில் ரூ.7.11 கோடி இருந்ததாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. சிஎம்எஸ் ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் அளித்த தகவல்களின்பேரில் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT