இந்தியா

எல்லையில் சீன ராணுவத்துடன் மோதலா? - இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

வேட்டையன்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துடன் மோதல் தொடர்வதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் சிங் கபூர் கூறியிருந்த நிலையில், அந்த எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் நகர்வை இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கொடுத்துள்ள விளக்கம்: எல்லை விவகாரம் குறித்து சில வினாக்களை பாதுகாப்பபு அமைச்சகத்திடம் எழுப்பி உள்ளோம். கடந்த காலங்களை போல இந்தியா மற்றும் சீன எல்லை பகுதியின் சூழல், சீன படைகள் அதன் வழக்கமான ரோந்துப் பணியில் இருந்து விலகிச் செல்லும்போது குழப்பம் ஏற்படுகிறது.

இரு நாடுகளின் தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான் அரசாங்க ரீதியான பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. இது சார்ந்து ராணுவ வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதை மேம்படுத்தும் வகையில் இரு தரப்பும் செயல்பட்டு வருகிறது.

எல்லைப் பகுதிகளில் அமைதியை காப்பது இரு தரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக அவசியமானது’ என வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலை சொந்தம் கொண்டாடும் சீனா

அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களுக்குச் சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சலப் பிரதேசத்தை ‘ஜாங்னான்' என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது. 

இவ்வாறு இந்தியப் பகுதிகளுக்குச் சீன மொழியில் பெயர் சூட்டி வரும் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய நில அளவைத் துறை அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்களை உள்ளடக்கி இந்தியா அதிகாரப்பூர்வ வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த இடங்களின் புவியியல் அம்சங்கள், அதிகாரப்பூர்வ இந்தியப் பெயர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த வரைபடத்துக்கும் சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறும்போது, “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதி. இதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. இது மறுக்க முடியாத உண்மை. 

அதேவேளையில், இந்த மறுக்க முடியாத எதார்த்தத்தை எதுவும் மாற்ற முடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் அருணாச்சல் பிரதேசம் என்பதை யாராலும் மாற்ற இயலாது. அருணாச்சல் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

பிரச்சினையும், காங்கிரஸ் எதிர்வினையும்:

அருணாசலப் பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் (பிஎல்ஏ) பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிலவி வரும் மோதல் பதற்றங்களின்போது, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையின் புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஷௌர்யா’ கமாண்டோ பிரிவு தனது திறமையை நிரூபித்துள்ளதாக அந்தப் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர் நேற்று தெரிவித்திருந்தார். இதை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவில், ‘சீன ராணுவ வீரர்களுடனான மோதல்கள் குறித்த தகவல்கள் ஜூலை மாதத்திலிருந்து மறைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பிரதமர் மோடி கவுனம் காத்து வருகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் நமது வீரர்களைக் கைவிட்டு, நாட்டுக்குத் துரோகம் செய்து, தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

சில நேரங்களில் சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். மற்ற நேரங்களில் ரோந்துப் பணிக்கான பகுதிகளையும் நாட்டின் நிலப் பரப்பையும் விட்டுக் கொடுக்கிறார். பிரதமர் மோடி பலவீனமான பிரதமர். அவர் நாட்டுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘தன்னைத் தானே உலக குரு என்று அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடி, சீனாவுக்குத் தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலை ராணுவத்துடனான சமீபத்திய மோதல் சம்பவங்கள் குறித்து பிரதமரும், அவரது நிர்வாகமும் இதுவரை காணாத மவுனத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேலும், 2025-26 நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 112 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 99 பில்லியன் டாலராக இருந்தது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தற்போது நடைமுறையில் ‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யுங்கள்’ என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT