புதுடெல்லி: மக்களவையில் பிப்ரவரி 4-ம் தேதி நடந்தது என்ன என்பது தொடர்பான வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளியிட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சீன ஆக்கிரமிப்பு குறித்த முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பிப்ரவரி 4ம் தேதி அன்று மக்களவையில் இந்த தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை எழுப்பியது.
பிரதமர் மோடி அன்று மக்களவைக்கு வராதது குறித்து இரு தரப்பு எம்.பி.க்களும் விவாதித்து வரும் நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4-ம் தேதியன்று எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில் பிரதமர் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் காட்சி உள்ளது. பின்னர் பாஜக எம்.பி.க்களுடன் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு “காங்கிரஸ் கட்சி, தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது.
நாடாளுமன்ற அவையில் பாஜக பெண் எம்பிக்கள் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் பெண் எம்பிக்களால் ஒரு மோசமான சம்பவம் அங்கு அரங்கேறி இருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.