அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மாணவர் தற்கொலையை அரசியலாக்குகிறார் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மைய குளறுபடி தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது, கல்வித் துறையில் நிலவும் ஊழலால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.
இந்த சூழலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கேள்விகள் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் நீட் மறுதேர்வு நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு, மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலும் அவர்கள் தேர்வுக்கு தயாராவதை சீர்குலைக்கும் வகையிலும் கோட்டா நகரில் ராகுல் காந்தி ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.
மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு, இந்த மறுதேர்வு தோல்வியடைய வேண்டும் என்று ராகுல் கூறி உள்ளார். அதேபோல மாணவர் தற்கொலை சம்பவங்களை ராகுல் அரசியலாக்குகிறார், இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். அதேநேரம், காங்கிரஸ் கட்சி மாணவர்களின் மரணங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது மட்டரகமான அரசியல்.
நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாகக் கூறி ராகுல் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அந்த மாணவருடைய தந்தையின் வேண்டுகோளின் பேரில் தான் அந்த மையம் ஒதுக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டவுடன், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மையத்தை நாக்பூருக்கு மாற்றியது. அரசியல் லாபத்துக்காக மாணவர்களைத் திசை திருப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.